தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ராமையா மகன் பாலமுருகன் (40). இவர் கோவில்பட்டி நகராட்சி ஐந்தாவது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலராக இருந்தவர். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் இவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். அப்போது சங்கரலிங்கபுரம் செல்லும் வழியில் உள்ள கோயில் முன்பு அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் கரும்பைக் கொண்டு தாக்கியுள்ளனர்.
இதில் நிலைதடுமாறி பாலமுருகன் கீழே விழுந்துள்ளார். அப்போது அந்தக் கும்பல் பாலமுருகனின் கால், இடுப்பு, கழுத்து பகுதியில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்துவந்த மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெபராஜ், மாவட்ட கிழக்கு காவல் துறையினர் ஆகியோர் பாலமுருகனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பார்வையிட்டார்.
இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் காவல் துறையினர் ஆய்வு செய்துவருகின்றனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தொலைவிலுள்ள இலுப்பையூரணி விலக்குவரை மோப்பநாய் ஓடிநின்றது.
பாலமுருகன் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்காக தீவிரமாக வேலை பார்த்தவர். ஆகவே இவரது கொலைக்கு உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா உள்ளதா என காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: வேலூரில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை