தூத்துக்குடி: நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவது உறுதியாகிவிட்டதாக தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக 52 ஆவது தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கயத்தாரில், அதிமுக 52 ஆவது தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிமுக கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பொதுகூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், "சட்டமன்றத் தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தது முதல் கையெழுத்து நீட் ஒழிப்பு, என்று கூறிய திமுக, அதை செய்யாமல் இன்று கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டு இருக்கிறது.
திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப் போவது மகளிர் உரிமைத் தொகை தான். ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக திமுக, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் கூறிய படி செயல்படவில்லை. 2024ஆம் ஆண்டு மட்டுமல்ல 2026ஆம் ஆண்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார்.
திமுக இன்றைக்கு பட்டுப்போன மரமாக உள்ளது. பூத்து, காய்த்து தொங்கும் மரமாக அதிமுக உள்ளது. தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுத்த பிறகும் அவரை பதவியில் இருந்து நீக்கமால் வைத்துள்ளார் பொம்மை முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின். அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருகிறாரோ, இல்லையோ என்று தெரியவில்லை.
தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை. ஆளுநர் மாளிகை முன்பே பெட்ரோல் குண்டு வீசப்படுகிறது. ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாதவர்கள், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பார்கள். இதனை மத்திய அரசு வேடிக்கை பார்க்காது. நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரக்கூடிய சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வந்தால் தான் நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருப்பார்கள்" என்று கூறினார்.
அதனைத்தொடர்ந்து, அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் பேசியதாவது, "மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தங்களது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு செயல்களை செய்து கொடுத்துள்ளார்.
ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்கள் என்று திமுக நினைக்கிறது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக தான் 40க்கு 40ல் வெற்றி பெறும். நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என்பது உறுதியாகிவிட்டது" என்று கூறினார்.
இதையும் படிங்க: ஐப்பசி மாத பௌர்ணமி.. திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!