தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ்-பென்னிக்ஸ் காவல் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு சிபிஐ குழுவினர் தமிழ்நாடு வந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன், தாமஸ் பிரான்சிஸ் உள்பட மொத்தம் ஒன்பது கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தங்களுக்கு பிணை வழங்கக்கோரி மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ காவல்துறையினர் சாத்தான்குளத்தில் பல்வேறு இடங்களிலும், கோவில்பட்டி கிளை சிறை, அரசு மருத்துவமனை ஆகியவற்றிலும் தொடர்ந்து பல மாதங்களாக விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. அப்போது, இந்த வழக்கில் கைதான ஒன்பது காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.
தற்போது குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பியூலா, ரேவதி உள்ளிட்ட ஆறு காவலர்கள், கோவில்பட்டி கிளைச் சிறை கண்காணிப்பாளர் சங்கர், கோவில்பட்டி மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த குற்றப் பத்திரிகையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் விசாரணை அறிக்கை, டெல்லி தடயவியல் ஆய்வு மையத்தின் அறிக்கை, ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோரின் உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் வாக்குமூலம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. மாஜிஸ்திரேட்டுகள் பாரதிதாசன் (கோவில்பட்டி), சரவணன் (சாத்தான்குளம்), சக்திவேல் (தூத்துக்குடி) ஆகியோர் உள்பட மொத்தம் 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இந்த வழக்கு விசாரணை அடுத்தக்கட்டமாக டிசம்பர் மாதம் 10ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.