சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சிறையிலேயே அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவகாரத்தின் வீரியம் அறிந்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. தடயங்களை அழிக்கக்கூடும் என்பதால் சிபிஐ வழக்கை விசாரிக்கும் முன் சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதையடுத்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் ரேவதி அளித்த சாட்சியங்களின் அடிப்படையில், கொலை வழக்குப் பதிவுசெய்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஐந்து காவலர்களை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிபிசிஐடி ஐஜி சங்கர், "சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் இதுவரை ஐந்து பேரை கைதுசெய்துள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அனைத்து கோணங்களிலும் விசாரணையை தீவிரப்படுத்தயுள்ளோம்.
சாட்சிகளின் வாக்குமூலம், ஆவணங்கள், தடயங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ச்சி செய்யவுள்ளோம். ஆவணங்கள், தடயங்களை ஆராய்ச்சி செய்த பிறகு, அடுத்த வாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க முடிவுசெய்துள்ளோம். அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஒரு குறிப்பிட்ட காலம் வரை விசாரணை தொடர்ந்து நடைபெறும். அதன் பின்னரே விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளதா, மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதா என்பதை கூற முடியும்" என்றார்.
இதையும் படிங்க: காவலர் மகாராஜன் ஆஜரான தகவல் பொய்யானது - ஐஜி சங்கர்