இந்திய கடல்வளத்தைப் பாதுகாக்கும் வகையில், வங்காள விரிகுடா கடல்பகுதி பாதுகாக்கப்பட்ட கடல் பூங்காவாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு கடற்பசு, கடல்குதிரை, கடல் அட்டை உள்ளிட்ட 53 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்களைப் பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடைவிதித்துள்ளது.
இருந்தபோதிலும், இந்தத் தடையை மீறி பலவித மருந்துகள் தயாரிப்பதற்காக கடல் அட்டைகளைப் சட்டவிரோதமாகப் பிடித்து உயிருடனும், பதப்படுத்தியும் கடத்தப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இதைத் தடுக்கும் பணியில் வன உயிரினப் பாதுகாப்புத் துறையினர் மற்றும் கடலோர பாதுகாப்புக் குழுமத்தைச் சேர்ந்த அலுவலர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி எட்டயபுரம் சாலையிலுள்ள மகளிர் கல்லூரி அருகே உள்ள குடோனில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்படவுள்ளதாக கடலோரப் காவல்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், தூத்துக்குடி கடலோர காவல்படை ஆய்வாளர் சைரஸ், உதவி ஆய்வாளர் ஜானகிராமன், நுண்ணறிவுப் பிரிவு காவலர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டனர்.
அப்போது அங்கு எட்டு மூட்டைகளில் இருந்த 200 கிலோ கடல் அட்டைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தூத்துக்குடி பள்ளிவாசல் தெரு வழியே வந்த காரை கடலோர காவல்படையினர் மடக்கி சோதனையிட்டனர். அப்போது கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, காரை சோதனையிட்டபோது காரின் பின்புறத்தில் நான்கு மூட்டைகளில் கடல் அட்டைகள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடல் அட்டைகளை காருடன் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் இன்று ஒருநாள் மட்டும் மொத்தம் 450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 35லட்சம் ரூபாய் ஆகும். இச்சம்பவம் தொடர்பாக லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்த மீராஷா என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட பனங்கள்ளு விற்பனை: முதியவர் கைது