தூத்துக்குடி துறைமுகம் வழியாக துபாய்க்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக அம்மாவட்டத்தில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரையிலிருந்து சுங்கத் துறை சீல்பெற்ற தூத்துக்குடி துறைமுகம் வழியாக துபாய் துறைமுகமான ஜபல்அலிக்கு கொண்டு செல்லப்பட இருந்த மூன்று கன்டெய்னர் லாரிகளை வருவாய் புலனாய்வு அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
அதன்பின் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக செம்மரக் கட்டைகள் அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கன்டெய்னர் உள்ளே இருந்த 8.19 மெட்ரிக் டன் செம்மரக் கட்டைகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு மூன்று கோடியே 25 லட்சம் ரூபாய் ஆகும். மேலும் லாரியை ஓட்டிவந்த மதுரையைச் சேர்ந்த குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்தில் தூத்துக்குடியில் உள்ள செம்மரக்கட்டை கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.