தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் பகுதியில் உள்ள காமராஜ் நகரைச் சேர்ந்த 14 பேர் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியிலிருந்து விளாத்திகுளத்திற்கு வேனில் சென்றனர்.
அப்போது, தூத்துக்குடி மாவட்ட எல்லையான புதூர் அருகே உள்ள சென்னமரெட்டிபட்டி பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் இருந்த காவல்துறையினர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 144 தடை உத்தரவை மீறி 14 பேர் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து விளாத்திகுளத்திற்கு சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக விளாத்திகுளம் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விளாத்திகுளம் தாசில்தார் ராஜ்குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வருவாய்த்துறையினர், 14 பேரையும் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து மருத்துவ பரிசோதனை செய்தனர். இதனைத்தொடர்ந்து விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு முழு பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவர்கள் யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில் 14 பேரும் விளாத்திகுளம் காமராஜ் நகரிலுள்ள அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவத் துறையினர் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் 144 தடை உத்தரவை மீறி வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் யுவராஜ் மீது விளாத்திகுளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு சரியான உணவு வழங்காத மருத்துவமனை நிர்வாகம்!