தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் விராலி மஞ்சள் பதுக்கிவைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன், உதவி ஆய்வாளர் சங்கர், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன் ஆகியோர் அடங்கிய காவலர்கள் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு லாரி செட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது, சோதனையில் 50 கிலோ வீதம் 24 மூட்டைகளில் 1200 கிலோ விராலி மஞ்சள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1200 கிலோ விராலி மஞ்சள் மூட்டைகளை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் மாரியப்பன் என்பவரிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக லாரி செட்டின் உரிமையாளர் தூத்துக்குடி பொன்ராஜ் மகன் மாணிக்கவேல் (30), லாரி செட் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், மஞ்சள் மூட்டைகள் ஈரோட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு, அனுமதியின்றி கடற்கரை வழியாகப் படகு மூலம் இலங்கைக்கு கடத்த பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறையினர் மஞ்சள் மூட்டைகள் பதுக்கிவைத்திருந்த லாரி செட்டிற்குச் சீல்வைத்தனர்.