தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ வைப்பார் கிராமத்தில் இன்று(மார்ச்.26) காலை வெறிநாய் ஒன்று, அப்பகுதி மக்களை துரத்தி துரத்தி கடித்துள்ளது. குழந்தைகள், வீட்டில் இருந்தவர்கள், தேவாலயத்துக்கு சென்று கொண்டிருந்தவர்கள் என அனைவரையும் கடித்துள்ளது. நாய் கடித்தவர்களுக்கு தலை, கழுத்து, இடுப்பு, கால், கை உள்ளிட்ட இடங்களில் பயங்கரமான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
10 வயது சிறுமி உள்பட 11 பேர் படுகாயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களை தாக்கிவிட்டு தப்பியோடிய வெறி நாயை பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக தேடிப்பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற முதியவர் கூறுகையில், "கீழவைப்பார் பகுதியில் உள்ள மக்களை தெரு நாய் விரட்டி விரட்டி கடித்தது. சிறிய குழந்தைகளையும் கடித்துள்ளது. நான் நடந்து சென்றபோது திடீரென என் மேல் ஏறிக் கொண்டு சரமாரியாக கடிக்கத் தொடங்கியது. எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் வந்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். இந்த சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் கொடூரமாக கடித்துள்ளது" என்று கூறினார்.
இந்த சம்பவம் கீழவைப்பார் கிராம மக்களிடையே பெரும் அச்சத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வழக்கறிஞர் வெட்டி கொலை - குற்றவாளியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்