தூத்துக்குடி: நெடுஞ்சாலைகளில் நாள்தோறும் விபத்துகள் நடக்கின்றன. இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது தொடர்ச்சியாக வாகனம் ஓட்டும் ஓட்டுநர் அசதியில் தன்னை அறியாமல் தூங்குவது தான். பயணங்களில் நொடிப்பொழுதில் ஏற்படும் சிறிய கவனச் சிதறலும் பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகளவில் ஏற்படுகிறது.
தூத்துக்குடி துறைமுகத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பிற மாவட்டங்களில் இருந்து சரக்குகளை ஏற்றி வந்து ஏற்றி கொண்டும் செல்கின்றன. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் லாரிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. தொலைதூரத்தில் இருந்து லாரிகளை ஓட்டி வரும் ஓட்டுநர்கள் களைப்பின் காரணத்தால் கண் அசராமல் இருப்பதற்காக தூத்துக்குடி பள்ளி மாணவர் ஒருவர் எளிய வடிவில் தீர்வை கண்டுபிடித்துள்ளார்.
தூத்துக்குடி, முத்தையாபுரம் சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர், சம்சுதீன், இவரது மகன் உவைஷ். இவர் தூத்துக்குடி ஸ்பிக் நகரில் உள்ள ஸ்பிக் நகர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். உவைஷ் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்டவர். 40 சதவீத சாலை விபத்துகள் வாகன ஓட்டிகள் தூக்கத்தினால் தான் நடக்கிறது. இந்த விபத்துகளைத் தடுக்கும் வகையில் மாணவர் உவைஷ் ஆன்ட்டி ஸ்லீப் கிளாஸ் என்ற கண்ணாடியை கண்டுபிடித்துள்ளார்.
மிகக் குறைந்த செலவில் இன்ஃப்ரா ரெட் ஃப்ரீகுவன்சி சென்சார் மற்றும் பஸ்ஸர், பேட்டரி, கண்ணாடி ஆகியவற்றைப் பயன்படுத்தி உவைஷ் இதனை வடிவமைத்துள்ளார். இந்த கண்ணாடியை அணியும் பொழுது தூக்கம் காரணமாக கண் இமை மூடினால் இதில் பொருத்தப்பட்டுள்ள அலாரம் அடித்து அவர்கள் தூக்கத்திலிருந்து விழித்து விபத்துகள் ஏற்படாத வண்ணம் இந்த கண்ணாடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கண்ணாடி வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாது இரவு நேரப் பணியில் ஈடுபடுவோர், இரவு நேர காவலாளிகள் ஆகியோருக்கும் இந்த கண்ணாடி பெரிதும் உதவும்.
இத்தகைய கண்ணாடியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ள மாணவன் உவைஷ்- யை ஸ்பிக் பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டி கௌரவப்படுத்தி உள்ளனர். மேலும், நாமக்கல் லாரி வாகன ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் சிறந்த இளம் விஞ்ஞானி என்று பட்டத்தையும் மாணவருக்கு வழங்கி உள்ளனர். மேலும், மத்திய அரசின் தேசிய அறிவியல் கண்டுபிடிப்பில் இவரது கண்டுபிடிப்பு தேர்வு செய்யப்பட்டு இந்த கண்டுபிடிப்பை மேம்படுத்த ரூபாய் 10 ஆயிரம் வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு குறித்து மாணவர் உவேஷ், “அடல் மராத்தான் போட்டிக்காக இதை வடிவமைத்திருந்தேன். இப்படி மக்களுக்கு பயன்படும் ஒன்றினை வடிவமைக்க எனக்கு ’அடல் டிங்கரிங் லேப்’ மிகவும் உதவியாக இருந்தது. இதை செய்து முடிக்க எனக்கு ஸ்பிக் நகர் பள்ளி தலைமை ஆசிரியர், அடல் டிங்கரிங் லேப் பயிற்சியாளர், வகுப்பு ஆசிரியர்களின் ஊக்கத்தினால் நான் இதை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளேன்” என்றார்.