தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் 'மாட்டுவண்டிப் பந்தயம்' (Bullock Cart Race) சிறப்பு பெற்றது. அந்தவகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை (Pongal Festival) முன்னிட்டு, வஉசி நற்பணி மன்றம் (VOC Charity Forum Trust Thoothukudi) நடத்திய பெரிய மாட்டுவண்டி பிரிவில் 11 மாட்டுவண்டிகளும், சிறிய மாட்டுவண்டி பிரிவில் 16 மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டுவண்டி பிரிவில் 32 வண்டிகளும் என மொத்தம் 59 மாட்டு வண்டிகளும், 118 காளைகளும் போட்டியில் கலந்துகொண்டன. இந்தப் போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த மாண்டு வண்டிகள் பங்கேற்றன.
செக்காரக்குடி கிராமத்திலிருந்து பொட்டலூரணி வரையிலான சாலையில் பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டிக்கு 14 கி.மீ. தூரமும், சிறிய மாட்டு வண்டிக்கு 10 கி.மீ. தூரமும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிக்கு 8 கி.மீ. தூரமும் போட்டிக்கான எல்லையாக அறிவிக்கப்பட்டது. பந்தயம் தொடங்குவதற்கு முன்னர், விவசாயிகள் தங்கள் காளைகளை வண்டியில் பூட்டி, கற்பூர ஆரத்தி காட்டி தயார் நிலையில் நிறுத்தி வைத்திருந்தனர்.
அப்போது காளைகளும் 'நாங்கள் போட்டிக்குத் தயார்' என்பதைப் போல, கழுத்தை ஆட்டி மணிகளை ஒலிக்கச் செய்தன. இதனைத்தொடர்ந்து, முதலில் பெரிய மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சிறிய மாட்டுவண்டிப் பந்தயமும், இறுதியாக பூஞ்சிட்டு மாட்டுவண்டிப் பந்தயமும் நடைபெற்றது. பந்தய எல்லைகளை வந்தடைந்த முதல் மூன்று மாட்டுவண்டிகளின் வீரர்கள், வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளுக்கு பரிசு: பெரிய மாட்டுவண்டிப் பந்தயத்தில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு, முதல் பரிசாக ரூ.20,023, இரண்டாம் பரிசாக ரூ.18,023, மூன்றாம் பரிசாக ரூ.16,023 வழங்கப்பட்டது. சிறிய மாட்டுவண்டிப் பந்தயத்தில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு, முதல் பரிசாக ரூ.14,023, இரண்டாம் பரிசாக ரூ.13,023, மூன்றாம் பரிசாக ரூ.12,023 வழங்கப்பட்டது. இதேபோல, பூஞ்சிட்டு மாட்டுவண்டிப் பந்தயத்தில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு, முதல் பரிசாக ரூ.9,023, இரண்டாம் பரிசாக ரூ.8,023, மூன்றாம் பரிசாக ரூ.7,023 வழங்கப்பட்டது.
இதில் பெரிய மாட்டுவண்டி போட்டிக்கு எல்லையாக 10 மைல் தூரம் நடந்ததில் 11 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன. இப்போட்டியில் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த மோகன்சாமி என்பவரின் மாடு முதலிடத்தைப் பிடித்தது. மேலும், 16-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்துகொண்ட சிறிய மாட்டுவண்டி போட்டியில் எட்டு மேல் எல்லை தூரம் நடைபெற்ற இந்த போட்டியில் வள்ளியூரைச் சேர்ந்த ஆனந்தத் தேவர் என்பவரது மாடு முதலிடத்தைப் பிடித்தது.
ஒரு லட்சம் வரை பரிசு: பின்னர் நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியில் 32 மாடுகள் பங்கேற்ற போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட 5 மைல் எல்லை வரை போட்டி நடத்தப்பட்டது. இதில், ஜக்கம்மாள்புரம் அஜித் குமார் என்பவரது மாடு முதலிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றது.
தொடர்ந்து, மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை பரிசாக ரொக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்தப் போட்டிகளை ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்கு ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் அனல் பறக்கும் க்ளிக்ஸ்