கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் திருவாரூர் அரசு மருத்துவமனையையும் விட்டு வைக்கவில்லை.
இது குறித்து நோயாளிகள் கூறும்போது, ’மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டால் நோயாளிகள் பிரிவில் உள்ள கழிவறைகளில் துணிகள், நாப்கின் போன்ற குப்பைக் கழிவுகள் அகற்றப்படாமலும், நோயாளிகள் தங்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும் சிரமப்படுகின்றனர். மேலும், மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லாததால், மருத்துவமனைக்கு வெளிப்புறம் உள்ள குழாயில் வரும் குடி நீரை குடிப்பதற்கு பயன்படுத்துகிறோம்’ என வருத்தம் தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதியுறும் சம்பவம் அனைத்து தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.