தமிழ்நாட்டில் விடியலை நோக்கி 'ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, இன்று திருவாரூரில் உள்ள வி.எஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது பரப்புரையை தொடங்க வந்த உதயநிதிக்கு திமுக தொண்டர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேடையில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் நீட் தேர்வால் அனிதா உள்பட 15 மாணவிகள் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு பலிக்காமல் உயிரை விட்டுள்ளனர்.
அதிமுகவினரின் அலட்சியத்தால் மாணவிகளின் கனவுகள் சிதைந்துள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு முற்றிலும் தடை செய்யப்படும்.
மேலும், டெல்லியில் வேளாண் சட்ட திருத்தத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.
வேளாண் திருத்த சட்டங்கள் தமிழ்நாட்டில் அமல்படுத்த விடாமல் திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்து வருவோம்" என்றார்.
மேலும், திருவாரூரில் சட்டக்கல்லூரி வேண்டும் என கல்லூரி மாணவி கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், திருவாரூர் என்ற பெயரே திமுக ஆட்சி காலத்தில் தான் வந்தது. திருவாரூரில் சட்டக்கல்லூரி வருவதற்கான நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலினுடன் பேசி விரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மர்மம் நீடித்து வருகிறது. இந்த மர்மத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு தோலுரித்து காட்டுவோம். பாஜக தலைவர் அமித்ஷா சென்னைக்கு வந்தபோது கூட்டம் கூடினார்கள்.
அப்போதெல்லாம் பரவாத கரோனா நாங்கள் கூட்டம் கூட்டினால் மட்டும் பரவி விடும் என முதலமைச்சர் கூறி கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவது வேடிக்கையாக உள்ளது" எனத் தெரிவித்தார்.