திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்து, நிர்ணயித்த இலக்கை அடைந்துள்ள நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அறுவடை பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.
மேலும், திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்துறை மூலம் வழங்கப்பட்ட இயந்திரங்கள் ஏழு மட்டுமே உள்ளதால், அதனை பதிவு செய்தால், 10 நாள்களுக்குப் பிறகே கிடைக்கிறது. இதனால், உரிய நேரத்தில் அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த அறுவடை இயந்திரங்கள் வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு இடைத்தரகர்கள் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 2 ஆயிரத்து 700 முதல் 3ஆயிரத்து 200 ரூபாய் வரை கேட்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை
தொடர்ந்து பெய்து வந்த மழையால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளதால், கூடுதலாக ஏக்கருக்கு 3 மணிநேரம் வரை அறுவடை செய்வதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வெளிமாநிலங்களிலிருந்து இறக்கப்பட்ட அறுவடை இயந்திரங்களுக்கு நிர்ணயமான விலை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நெற்கதிர் அறுவடை இயந்திரம் திருடிய இருவர் கைது