மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வேளாண் துறை அமைச்சர் மறைவு குறித்து இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களுடைய மறைவு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கிறது. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து நேரடியாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்தவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று சிறப்பாக செயல்பட்டவர். அதனடிப்படையில் அவர் தமிழ்நாடு அரசின் வேளாண்துறை அமைச்சராக 2016இல் பொறுப்பேற்றார்.
சாதாரண ஒரு விவசாயி, வேளாண் துறை அமைச்சராக பொறுப்பேற்றது காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. அவர் எல்லோரிடத்திலும் அன்போடும், பண்போடும் பழகக்கூடியவர். வயதில் குறைந்தவராக இருந்தாலும் அண்ணன் என்று எல்லோரையும் மரியாதையாக அழைக்க கூடிய ஒரு பண்பாளர்.
எந்த ஒரு பிரச்னையை அவரது கவனத்திற்கு கொண்டு சென்றாலும், உடனடியாக அது குறித்து உயர் அலுவலர்களிடம் பேசி, நடவடிக்கை குறித்து மீண்டும் எங்களை தொலைபேசியில் அழைத்து அதற்கான பதிலை எங்களுக்கு கொடுப்பார். அவர் அமைச்சர் என்கிற எந்த ஒரு தற்பெருமைக்கும் இடமளிக்க மாட்டார்.
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு விவசாயி வேளாண் துறை அமைச்சராக இருப்பதை அறிந்து விவசாயிகள் பெருமையோடு மகிழ்ந்தனர். இவரது பணி மிக சிறப்பானது. கரோனா என்கிற தொற்று நோய் தாக்குதலால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து, அக்டோபர் 26ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்று குடும்பத்தாரிடமும், வேளாண் துறை அலுவலர்களிடமும் நலம் விசாரித்து விட்டு மீண்டு வருவார் என்று நம்பிக்கையோடு இருந்தோம். இச்சூழலில் அவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மிகப்பெரிய பேரிழப்பு ஆகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கலுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் விவசாயிகள் சார்பில் தெரிவித்துகொள்கிறேன். கண்ணீர் அஞ்சலியையும் காணிக்கை ஆக்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.