திருவாரூரில் நகர் பகுதி வழியாக ஓடம்போக்கி ஆறானது செல்கிறது. இதுவரை இந்த ஆற்றில் முறையாக தூர்வாரப்படவில்லை எனக் கூறி அதனை தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் பார்வையிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர்.பாண்டியன், "ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்குச் செல்லக்கூடிய ஓடம்போக்கி ஆறு முறையாக தூர்வாரப்படவில்லை என்றால் எப்படி மற்ற குளங்கள், ஆறுகள் தூர்வாரப்படும்" என அவர் கேள்வியெழுப்பினார்.
மேலும் "குளங்கள், குட்டைகள் வறண்டு கிடக்கின்ற நிலையில் டெல்டா விவசாயிகளுக்குத் தற்போது தண்ணீர் தேவையில்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியிருப்பது உண்மையாக இருக்கும் என்றால், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் ஏன் திறந்து வைத்தார். அதன் அவசியம் என்ன? ”எனவும் கேள்வி எழுப்பினார். அதோடு விவசாயிகளுக்கு விவசாயம் மேற்கொள்ள தண்ணீர் கிடைக்கிறதா என்பதை அரசுக்கு வேளாண் அலுவலர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஆழ்துளை குழாய் மூலம் சாகுபடி மேற்கொண்டுள்ள இடங்களில் கொள்முதல் நிலையங்களை தடையின்றி திறக்க நடவடிக்கை எடுப்பதோடு, இந்த ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை முதலமைச்சரிடம் பேசி உடனடியாக உணவுத்துறை அமைச்சர் அறிவிக்க வேண்டும் எனவும் கூறினார்.