திருவாரூர் மாவட்டம் நமச்சிவாயபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் பாலசுந்தரம் (23). இவருடைய தந்தை விவசாய கூலி வேலை செய்துவருகிறார். இவருடைய தாய் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு இரண்டு அண்ணன்களும் ஒரு தங்கையும் உள்ளனர்.
பாலசுந்தரம் கும்பகோணத்தில் இயங்கிவரும் கவின் கலைக் கல்லூரியில் நுண்கலை சிற்பத் துறையில் நான்காம் ஆண்டு படித்துவருகிறார். கரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில், இந்த நேரத்தை வீணாக செலவழித்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் வெறும் களிமண் கொண்டு சிலை வடிவமைக்க ஆரம்பித்துள்ளார் பாலசுந்தரம்.
அதாவது வயலில் கிடைக்கக்கூடிய களிமண், நெல் பதர் (கருக்காய்), மணல் இவை மூன்றையும் வைத்து அய்யனார் சிலை செய்ய தொடங்கியுள்ளார். கடந்த 65 நாள்களில் 13 அடி உயர அய்யனார் சிலை ஒன்றை செய்துள்ளார்.
தற்போது கருங்கல், சுண்ணாம்பு கொண்டு சிலைகள் செய்துவரும் சிற்ப கலைஞர்களுக்கு மத்தியில், வெறும் களிமண்கொண்டு சிலைசெய்து வருவது பலரையும் ஈர்த்துள்ளது.
இது மட்டுமில்லாமல் புத்தர் சிலை, சிவன், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, குதிரை, போன்ற பல்வேறு சிலைகளை பாலசுந்தரம் இயற்கை முறையில் களிமண்கொண்டு வடிவமைக்க ஆரம்பித்துள்ளார். அவர் செய்வதை பார்த்து அந்தப்பகுதி மக்களும், அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களும், எங்களுக்கும் இதுபோன்ற சிலைகள் செய்துகொடுங்கள் என கேட்டதாகத் தெரிவிக்கிறார் பாலசுந்தரம்.
இதுகுறித்து பாலசுந்தரம் கூறுகையில், "ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வெளியில் எங்கும் செல்லமுடியாத சூழ்நிலை உருவானதால் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. விவசாய குடும்பம் என்பதால் வருமானம் இல்லாமல் கையில் இருப்பதை வைத்துக்கொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கில் இயற்கையாக கிடைக்கக் கூடிய களிமண், மணல், நெல் (பதர்) கருக்காய்கொண்டு சிலைகள் செய்ய ஆரம்பித்தேன். இந்த 65 நாட்கள் செய்து தற்போது அய்யனார் சிலை முழுவதுமாக முடித்துவிட்டேன். இந்த கலையை எங்கள் ஊர் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து வருகிறேன்" என்றார்.
"தற்போது 13 அடி உயர ஐய்யனார் சிலையை செய்துள்ளேன். அடுத்த முறை 50 அடி உயர சிலை செய்யப்போகிறேன் என கூறுகிறார். நமது பாரம்பரிய காவல் தெய்வங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக்னி வீரன், அய்யனார், முனீஸ்வரர், கருப்புசாமி, காத்தவராயன், வால் முனீஷ்வரன், பெண் காவல் தெய்வகளான அம்மன், பெரியாச்சி அம்மன் போன்ற கிராமப்புற காவல் தெய்வங்களை செய்யப்போகிறேன்" என கூறுகிறார் பாலசுந்தரம்.
இதையும் படிங்க...பாலியல் தொழில் செய்யும் பெண்கள் இடத்தில் இருந்து துர்கா சிலைக்கு மண்: வழக்கத்தை மாற்றும் சமய தலைமைகள்...!