தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மணம்புச்சாவடியில் உள்ள நூற்றாண்டு கண்ட பள்ளி பிளேக் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் ஆண்டுதோறும் வெளியேறும் மாணவர்களுள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுக்கு ஒருமுறை ரீயூனியன் வைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று 76ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு 1975-1976 ஆம் ஆண்டு ஒன்றாக படித்த 60 மாணவர்களுக்கு ரீயூனியன் நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் தங்களது நண்பர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பார்த்து நெகிழ்ச்சியடைந்தனர். மேலும் நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக 50 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் ஆசிரியையாய் இருந்த சண்முகவடிவு என்ற ஆசிரியை வருகை புரிந்து முன்னாள் மாணவர்களுக்கு பாடம் கற்பது போல். தங்களது வாழ்வில் அனைவரும் Happy, Happier , Happiest என்ற நிலையில் எந்த நிலையில் உள்ளீர்கள் என கேள்வி யெழுப்பினார்.
இதையும் படிங்க: "4 ஆண்டுகளில் மதுரையில் மட்டும் இத்தனை ஆயிரம் மின்மீட்டர்கள் பழுதா?" - ஆர்டிஐ-யில் அதிர்ச்சி தகவல்!
இதனைத் தொடர்ந்து, நீண்ட நாட்களுக்கு பின் சந்திக்கும் மாணவர்கள் தங்களின் தற்போதைய நிலை, குடும்பம் போன்ற அனைத்தும் குறித்து பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சி கடலில் மூழ்கினர். மேலும் 50 ஆண்டுகளுக்கு முன் எடுத்த புகைப்படங்களை காட்டி பள்ளி பருவத்தில் நடந்த இனிய நினைவுகள் குறித்தும், நபர்கள் குறித்தும் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டனர்.
இது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செல்வகுமார் என்பவர் கூறுகையில், “1975-76 ஆம் ஆண்டு 10ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்த்த வேண்டும் என்று எண்ணினோம். அதே போல் இந்த ஆண்டும் பொன் விழாவாகவும், ரீயூனியனாகவும் அமைந்துவிட்டது. இதில் கலந்து கொண்டதில் மிக மகிழ்ச்சி.
பெங்களூர், சென்னை, பாண்டிச்சேரி, திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய ஊர்களிலிருந்து இங்கு முன்னாள் மாணவர்கள் வந்துள்ளனர். இங்கு படித்து சென்ற பலர் மருத்துவராகவும், வழக்கறிஞராகவும், தொழிலதிபராகபவும், அரசியல் பிரமுகராக ஆகியுள்ளனர். தனது பால்ய நண்பர்களை தேடி இங்கு வந்தேன்.
முன்பு இப்பள்ளி ஓட்டு கட்டிடமாக இருந்தது. தற்போது மாடி கட்டிடமாக மாற்றப்பட்டுள்ளது. முன்னாள் மாணவரும் முன்னாள் எம்பியுமான பழநிமாணிக்கம் நிதி உதவி அளித்ததால் இப்பள்ளி வளர்ந்துள்ளது” என்றார். இறுதியாக ரீயூனியனுக்கு வருகை புரிந்திருந்த அனைவரும் சேர்ந்து குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இவ்வாறு முன்னாள் மாணவர்களிடயே நடந்த ரீயூனியன் நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.