சென்னை: ’லப்பர் பந்து’ படத்தின் கதாநாயகி சஞ்சனா படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘லப்பர் பந்து’. கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவான லப்பர் பந்து திரைப்படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
கடந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் இடம்பிடித்து சாதனை படைத்தது. லப்பர் பந்து திரைப்படம், எப்போதும் போல ஒரு கிரிக்கெட் போட்டியை பற்றிய திரைப்படம் என நினைத்து படத்தை பார்த்த ரசிகர்களுக்கு, விறுவிறுப்பான அதே சமயத்தில் நகைச்சுவை கலந்த திரைப்படமாக அமைந்தது. இப்படத்தில் மாமனார், மாப்பிள்ளையாக அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.
மேலும் இவர்களுக்கு சமமாக படத்தின் நாயகிகள் சுவாசிகா, சஞ்சனா ஆகியோரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அவர்களது நடிப்பும் பாராட்டை பெற்றது. கடந்த வருடம் வேட்டையன், மெய்யழகன் போன்ற பெரிய திரைப்படங்கள் வெளி வந்தாலும், லப்பர் பந்து திரையிடப்பட்ட தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியது. இப்படத்திற்கு பிறகு ’அட்டகத்தி தினேஷ்’ என்று இருந்த பெயர் ’கெத்து தினேஷ்’ என்று மாறியது.
இந்நிலையில் லப்பர் பந்து படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தவர் சஞ்சனா. ’வதந்தி’ வெப் சீரியஸ் மூலம் அறிமுகமான சஞ்சனா, மணிரத்னம் இயக்கி வரும் ’தக் லைஃப்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சஞ்சனா திரைப்படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரபல நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ’ஏன்டி விட்டு போன’... சிம்பு குரலில் வைரலாகும் ’டிராகன்’ பாடல் ப்ரோமோ! - EN DE VITTU PONA SONG PROMO
தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் சுதா கொங்குரா, ஐஷ்வர்யா ரஜினிகாந்த் என ஒரு சிலரே உள்ளனர். அந்த வகையில் நடிகைகள் ரேவதி, ரோகிணி, லஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் தமிழ் சினிமாவில் கதாநாயகிகளாக அறிமுகமாகி இயக்குநர்கள் ஆகியுள்ளனர். இந்த வரிசையில் லப்பர் பந்து படத்தின் நாயகி சஞ்சனா பெயரும் இடம்பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.