சென்னை: தமிழ் சினிமாவின் பெருமையை சர்வதேச அளவில் உயர வைக்கும் வகையிலான திரைப்படங்கள் அவ்வப்போது வருவதுண்டு. 'காக்கமுட்டை', 'விசாரணை' என அந்த வரிசையில் தற்போது சர்வதேச அரங்கிற்கு சென்றிருக்கும் மற்றொரு திரைப்படம் 'பேட் கேர்ள்' (Bad Girl).
வெற்றிமாறனின் உதவி இயக்குநரான வர்ஷா பரத் இயக்கியிருக்கும் இப்படத்தினை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. பாலிவுட்டின் முக்கிய இயக்குநர் அனுராக் காஷ்யப் இந்த படத்தை வெளியிடுகிறார். அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண் ஆகியோர் இந்த் படத்தில் நடித்துள்ளனர். 'பேட் கேர்ள்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று (ஜன.26) சென்னையில் நடைபெற்றது.
படத்தின் டீசரானது ஒரு பெண்ணின் பதின்பருவத்தில் இருந்து தனது முப்பது வயதைத் தொடும் காலம் வரையிலான வாழ்க்கையை பேசுவதாக இருக்கிறது. சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கும் பல விசயங்களை உடைத்து பெண்களின் குரலை பேசுவதாக இருக்கிறது. பெண்ணின் அக வாழ்க்கையை முடிந்தளவிற்கு எந்தவித பூச்சும் இல்லாமல் படத்தில் காட்டியிருப்பார்கள் என டீசர் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “என்னிடம் வேலை செய்யும் உதவி இயக்குநர்கள் பல கதையின் ஐடியாக்களை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நான் ஒரு கடுமையான விமர்சகர். கதை நன்றாக இருக்கிறது, ஆனால் இது படமாக உருவாகது என சொல்வேன். என்னிடம் வந்து கதை சொல்ல நிறைய தைரியம் தேவை. எல்லாத்தையும் மீறி கதை சொன்னாலும் நான் நன்றாக இல்லை என்றுதான் பெரும்பாலும் சொல்லுவேன்.
கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியில் வரும் கதைகளில், எந்தக் கதை வித்தியாசமாக தெரிந்தாலும், அனுராக் காஷ்யப்பிடம் பகிர்ந்து கொள்வது வழக்கம். இந்தப் படத்தின் முதல் பாதியை பார்த்த அனுராக், படத்தை மிகவும் பாராட்டி நானே இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என்று கூறினார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைக்க அமித் திரிவேதியை தொடர்பு கொண்டு பேசி இசையமைக்க வைத்தார்.
ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் முக்கிய பிரிவான Tiger Competetion பிரிவில் வர்ஷா பரத்தின் Bad Girl படமும் இடம் பெற்றிருப்பது, தனிச்சிறப்பு . இந்தப் படம் கிராஸ் ரூட் நிறுவனத்தைப் பெருமைப்பட வைக்கும் எனு நம்புகிறேன்" என்று பேசினார்.
மிஷ்கினின் சர்ச்சை பேச்சு குறித்து வெற்றிமாறன், “மிஷ்கின் போன வாரத்திற்கு பிறகு வரக்கூடிய முதல் மேடை இது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் நானும், அமீரும் ரொம்ப நேரம் பேசினோம். மிஷ்கினிடமும் மொபைலில் பேசினேன். எனக்கும் சில கருத்துகள் இருக்கிறது என அவர் சொன்னார். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம்.
ஒரு நிகழ்வு தவறாகும் போது, அதை உடனடியாக சரி செய்யக்கூடிய தைரியம் மிஷ்கினுக்கு இருக்கிறது. அது எனக்கு சந்தோசமா இருக்கிறது. இந்தக் குணநலன் எல்லாருகிட்டயும் இருக்க வேண்டும். ஒருவரின் மனம் புண்படும்போது அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வது பெரிய விஷயம் என நான் நினைக்கிறேன்” என கூறினார்.
நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் வர்ஷா பேசிய போது, "தமிழ் சினிமாவில் பெண் என்றால் பூவைப் போன்று இருக்க வேண்டும். கற்புடையவளாக இருக்க வேண்டும். தெய்வம் மாதிரி புனிதமாக இருக்க வேண்டும் என கதை எழுதுகிறார்கள். இது பெண்களின் தோள் மீது வைக்க்கப்படுகிற அதிகப்படியான அழுத்தமாக இருக்கிறது. அதனால், நான் பெண்களுக்கு தகுந்த மாதிரியான ஒரு கதாப்பாத்திரத்தை உருவாக்க நினைத்தேன்.
இந்தக் கதையைக் கேட்டு பெண்கள் எல்லாம் ஒரே மாதிரியான பதில் உணர்வுகளைத்தான் கொடுத்தார்கள் ஆனால், ஆண்களிடம் சொன்னபோது ஒரே மாதிரியான பதில்கள் வரவில்லை. இந்தப் படம் பெண்கள் பத்தின ஒரு விவாதத்தை தொடங்கி வைக்கக்கூடிய படமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இந்தப் படம் பெண்கள் எப்படி வாழ வேண்டும் என சொல்லக்கூடிய படம் இல்லை. எல்லோரும் எப்படி இருக்க வேண்டும் என என்னால் சொல்ல முடியாது.
இதையும் படிங்க: ’ஏன்டி விட்டு போன’... சிம்பு குரலில் வைரலாகும் ’டிராகன்’ பாடல் ப்ரோமோ!
இந்தப் படத்திலுள்ள பெண் கதாபாத்திரம் ஒரு ஹீரோ கிடையாது. அந்த பெண் ஒரு விஷயத்திற்காகவும் வாழ்வதற்காகவும் போராடுகிறாள். இதற்காக அவளை எல்லோரும் பின் தொடர வேண்டிய அவசியமில்லை. நிறைய குறைகளும் இருக்கக்கூடிய சாதரண பெண்தான் அவள். நிறைய படங்களில் இதே குறைகளுடன் இருக்கக்கூடிய ஆண் ஹீரோக்கள் கொண்டாடப்படுவதை நான் பார்த்துதான் வளர்ந்திருக்கிறேன்.
அதனால் இந்த கதாபாத்திரத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.நான் இந்தப் படத்தின் மூலம் பெண்கள் குடிக்கனும் என்றெல்லாம் சொல்ல வரவில்லை. இது ஒரு பெண்ணைப் பற்றிய கதை. அவ்வளவு தான். பெண்களையும் சாதரண மனிதர்களாக நடத்த வேண்டும் என சொல்ல விரும்புகிறேன். பெண்கள் புனிதர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என பேசினார்.