வல்லரசு நாடான அமெரிக்க நாட்டின், அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். தனது கட்சி சார்பில் போட்டியிடும் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை ஜோ பிடன் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் காரணமாக, அமெரிக்க அதிபர் தேர்தல் முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவிலும் தனிக் கவனம் பெற்றுள்ளது. ஏனெனில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் உலகின் மிக உயரியப் பதவிக்கு போட்டியிடுகிறார் என்ற செய்தி, இந்தியாவில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமமும் தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்துள்ள பைங்காடு துளசேந்திரபுரம் என்ற கிராமம் தான், கமலா ஹாரிஸின் பூர்வீகம் என்பதே இதற்குக் காரணம். அவரது தாய் வழித் தாத்தா வி.டி. கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் இங்கு வாழ்ந்துள்ளனர். தங்கள் மண்ணைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவருக்கு, இத்தகைய பெருமை கிடைத்துள்ளதால், துளசேந்திரபுரம் கிராம மக்களும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.
இதையடுத்து, கலிபோர்னியாவின் மேலவை உறுப்பினரான கமலாவுக்கு துளசேந்திரபுர கிராமத்தின் தெருக்களில் கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆம், துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என, வாழ்த்தி கட்-அவுட் வைத்து கிராம மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அவர் வெற்றிவாகை சூடி தங்கள் கிராமத்திற்கு ஒரு முறை வருகை தர வேண்டும் என விருப்பத்தையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். கமலா ஹாரிஸின் தாயுடைய குலதெய்வக் கோயில், இந்தக் கிராமத்தில்தான் உள்ளது. கமலாவின் வெற்றிக்காக கோயிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. இந்தக் குல தெய்வமான சேவக பெருமாள், தர்ம சாஸ்தா கோயில் குடமுழுக்கு, கடந்த 2014ஆம் ஆண்டில் நடைபெற்றுள்ளது.
குடமுழுக்கு விழாவிற்கு கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் நன்கொடை அளித்துள்ளதாக, கோயிலை நிர்வகித்து வரும் ரமணன் தெரிவித்தார். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல, கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் பிறந்தாலும், துளசேந்திரபுரத்துடனான அவரது பந்தம் என்றும் விடாது என்பதே நிதர்சனம்.
இதையும் படிங்க: '23 ஆண்டுகள், நாள்தோறும் 40 கி.மீ. சைக்கிள் பயணம்' - 51 வயது காவலரின் கதை