அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிட்டுள்ளார். குறிப்பாக தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியினர் களம் இறங்கியுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று (நவ.3) நடைபெற்றது. இன்று (நவ.4) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் (55) தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
ஸ்டெனோகிராஃபராக வாழ்க்கையைத் தொடங்கிய கோபாலன், ஆங்கிலேய அரசில் சிவில் சர்வீஸ் பணியில் பணியாற்றியவர். 1930ஆம் ஆண்டு சாம்பியா நாட்டுக்கு கொடிசியாவில் இருந்து வந்த அகதிகளை கணக்கெடுப்பு செய்வதற்காக, இந்திய அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்.
இவருக்குப் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளில் சியாமளா கோபாலன் என்பவருக்கு மகளாகப் பிறந்தவர்தான் கமலா ஹாரிஸ். இவர் சட்டப்படிப்பு பயின்றவர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.
சான் பிரான்சிஸ்கோ, கலிஃபோர்னியாவில் அட்டார்னியாகவும், கலிஃபோர்னியாவில் ஷெனட்டராகவும் பதவி வகித்துள்ளார். இவர், கடந்த 2019ஆம் ஆண்டில் trues we hold என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் தனது தாத்தா பி.வி.கோபாலன் குறித்து பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு ஊக்க சக்தியாக தாத்தா திகழ்வதாகவும் கடந்த 1991ஆம் ஆண்டு சென்னையில் தனது தாத்தா கோபாலனுக்கு 80ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டபோது சென்னை வந்திருந்ததாகவும் அங்கு அனைத்து குடும்பத்தினரும் கூடியிருந்தது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதல் முதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் போட்டியிட்டுள்ளார். அதேபோல் திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட கோபாலன் என்பவரின் பேத்தி, இத்தகைய உயர்ந்த பதவிக்கு போட்டியிட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துளசேந்திரபுரம் கிராமம் முழுவதும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்துகள் தெரிவித்து விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி நேற்று (நவ.3) அவரது குலதெய்வமான தர்ம சாஸ்தா அய்யனார் கோயிலில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி அவர் வெற்றி பெற வேண்டும் என சிறப்பு வழிபாடு நடத்தயுள்ளனர்.
துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள தர்ம சாஸ்தா கோயிலில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழாவிற்கு, கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் நன்கொடையாக ரூ. 5 ஆயிரம் கொடுத்ததாக கோயிலில் உள்ள கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது. தற்போது கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவி ஏற்கும் நாளை அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற கோயிலில் சிறப்பு வழிபாடு!