திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 8) ஆய்வு செய்தனர். அப்போது, கரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், "தமிழ்நாட்டில் முதலமைச்சர் உத்தரவுக்கேற்ப சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முதலமைச்சரைப் பாராட்டும் வகையில் ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் உள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் நோய்க் கட்டுப்பாடு பணிகளையும் நோய்த் தாக்கியவர்களைப் பராமரிக்கும் பணியும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. 90 விழுக்காடுவரை அந்தப் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.
வீடியோ அழைப்பு மூலம் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறும் சஞ்சீவினி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 32 ஆயிரத்து 870 பேர் பயன் பெற்றுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இத்திட்டத்தின் கீழ் அதிகம் பயன்பெற்றுள்ளது. கடந்த வாரத்தின் நிலவரப்படி கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 3,700 கர்ப்பிணிகளுக்கு உரிய சிகிச்சையளித்து பிரசவித்த குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்படா வண்ணம் பராமரிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்மா சிகிச்சை பலன் அளிக்கக் கூடிய வகையில் இருப்பதால், பிளாஸ்மா சிகிச்சையைத் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கான பயிற்சி தற்போது வழங்கப்பட்டு வருகிறது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் 14 நாள்களுக்குப் பிறகு பிளாஸ்மா தானம் செய்ய தகுதியுடையவர்கள். எனவே, குணமடைந்தவர்கள் பிளாஸ்மாவை தானமாக வழங்க முன்வர வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: சென்னையில் குறைந்து வரும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்!