நாகை தொகுதி மக்களவைத் தேர்தல், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி வருகின்ற 23ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. வாக்கு எண்ணும் பணிகள் தொடங்குவதற்கு முன்னரே காலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்கு எண்ணும் அலுவலர்கள் வர வேண்டும். மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்டிப்பாக தொலைபேசி பயன்படுத்தக்கூடாது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு அலுவலர், ஒரு உதவி அலுவலர், ஒரு நுண் பார்வையாளர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 17 நிர்வாக அலுவலர்கள், 17 உதவி அலுவலர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 51 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி, திருவாரூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையம், இதர பணிகளுக்காக மொத்தம் 729 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாக்கு எண்ணிக்கைகள் முழுமையாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.