உலகப் புகழ்பெற்ற மிகப்பெரிய அழகியதேரும், கோயிலும், குளமும் கொண்டதிருத்தலமாக விளங்கும் சர்வதோஷ பரிகாரத்தலமான திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குரிய தலையாய சிறப்புகளில் ஒன்று ஆழித்தேர்.
ஆசியாவின் மிகப்பெரிய ஆழித்தேர் என்ற பெருமைக்குரிய இதன்சிறப்பம்சங்கள். அலங்கரிக்கப்பட்ட 96 அடி உயரத்திலான ஆழித்தேர் 360 டன் எடையைக் கொண்டது.
கண்ணப்பநாயனார், அமர்நீதியார், இயற்பகையார், ஏனாதிநாயனார், காரைக்கால் அம்மையார் ஆகிய 63 நாயன்மார்களின் புராண சிற்பங்கள், பெரியபுராணம், சிவனின் திருவிளையாடல்களை விளக்கும் சிவபுராண காட்சிகள் மரத்தில் படைப்பு.
சிற்பங்களாக தேரின் 3 நிலைகொண்ட அடிப்பாகத்தில் அழகியக் கலைநயத்துடன் வடிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட புராணக் கதைகளை எடுத்துக்கூறும் மரச்சிற்பங்கள் ஆழித்தேரில் இடம்பெற்றுள்ளன.
தொன்மைத் தமிழர்கள் வடிவமைத்த அந்த ஆழித்தேர் விழாதான் தற்போது திருவாரூரில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7.15 மணிக்கு தொடங்கிய ஆழித்தேரோட்டத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் 'ஆருரா! தியாகேசா!'என்று பக்தி கோஷம் எழுப்பி தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஆழித்தேரைத் தொடர்ந்து அம்பாள் தேர், சண்டிகேசுவரர் தேர் இழுக்கப்பட்டுவருகிறது.
தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து தொடங்கிவைத்தனர். தேரோட்டம் கீழ வீதியில் தொடங்கி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதிவழியாக மீண்டும் நிலையடிக்கு மாலை 7 மணிக்குள் வந்தடையும்.
இந்த தேரோட்டத்திற்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கு வரும் மக்களின் பாதுகாப்பிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நான்கு வீதிகளைச் சுற்றி கண்காணிப்பு கோபுரங்கள்அமைக்கப்பட்டுள்ளது. தேரைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் செல்கின்றது.