திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது நேற்று காலை 8 மணியளவில் தொடங்கி இன்று அதிகாலை 5 மணி வரை நடைபெற்றது. பத்து வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு திமுக 12 இடங்களில் போட்டியிட்டதில் 10 இடங்களையும், அதிமுக 14 இடங்களில் போட்டியிட்டதில் 3 இடங்களையும் கைபற்றியது. இந்திய கம்யூனிஸ்ட் மூன்று இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. மன்னார்குடி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு அப்பதவிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
மேலும், திருவாரூரில் 176 ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பதவி உள்ள நிலையில், திமுக 135 இடங்களில் போட்டியிட்டதில் 72 இடங்களையும், அதிமுக 148 இடங்களில் போட்டியிட்டதில் 58 இடங்களையும் கைபற்றியது. இந்திய கம்யூனிஸ்ட் 21 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும் வெற்றிபெற்றன. அதிமுக கூட்டணி கட்சியான பாஜக மூன்று இடங்களிலும், பாமக 1 இடத்திலும், தேமுதிக 2 இடங்களிலும் வெற்றிபெற்றன. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 176 இடங்களிலும் தனித்து போட்டியிட்டு இரண்டு இடத்தில் வெற்றிபெற்றது. மேலும் சுயேச்சையாக 14 பேர் அரசியல் கட்சிகளை எதிர்த்து வெற்றிபெற்றுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தைப் பொருத்தவரை அதிமுகவை விட திமுக வேட்பாளர்கள் அதிகமான இடங்களில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளனர். மேலும், வாக்கு எண்ணிக்கை தாமதம், மறு வாக்கு எண்ணிக்கை, வெற்றிபெற்ற வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் என பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுக கூறிவந்த நிலையிலும், விழிப்போடு இருந்தமையால் தங்கள் வெற்றியைப் போராடிப் பெற்றுள்ளதாக திமுகவினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ‘யார் முன்னாடி எண்ணுனிங்க? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?’ - அலுவலரை வறுத்தெடுத்த திமுக எம்.பி.