திருவாரூர் மாவட்டத்தில் நகராட்சி குடிநீரானது, குடிநீர் குழாய் மூலம் சில நாள்களுக்கு முன்னர் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து திருவாரூர் நகரில் துர்காலயா ரோடு, வ.ஊ.சி தெரு, கமலாம்பாள் நகர், அவ்வை நகர், அண்ணா நகர், நீடாமங்கலம், திருக்குவளை,உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டவர்களுக்கு திடீர் வாந்தி, பேதி ஏற்பட்டது.
இவர்கள் உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இவர்களுக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஆறு பேருக்கு காலரா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
நகராட்சி குடிநீருடன் கழிவுநீரும், பாதாள சாக்கடை கழிவுநீரும் கலந்துவருகிறது. இந்தத் தண்ணீரை குடித்ததால்தான் அனைவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டது என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கொள்ளிடம் குடிநீர் வரவழைக்கப்பட்டு திருவாரூர் நகராட்சி முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எவ்வளவு நாள் கொள்ளிடம் குடிநீர் வரும், இதனால் உடனடியாக நகராட்சி நிர்வாகம் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தி சுகாதாரமான குடிநீரை விரைவில் வழங்க வேண்டும் என்றனர்.
இன்று பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களை நகராட்சி ஊழியர்கள் எங்கெல்லாம் கழிவுநீர் கலக்கிறது என்று ஆராய்ந்து குடிநீர் குழாய்களின் அடைப்பையும், பாதாள சாக்கடை இணைப்பையும் சரிசெய்து வருகின்றனர்.
இதையும் படிங்க... நகராட்சி தண்ணீரைக் குடித்த 50 பேருக்கு வாந்தி, பேதி!