டெல்லியில் கடந்த மாதம் தப்லிக் ஜமாத் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய மத மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட நபர்களுக்கு அதிக அளவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவித்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 26 நபர்கள் உள்பட மியான்மர் நாட்டை சேர்ந்த 13 நபர்கள் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் ஏழு பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் திருவாரூர் மாவட்டம் கூத்தநல்லூரை சேர்ந்த மூன்று பேருக்கும் நீடாமங்கலத்தை சேர்ந்த இரண்டு பேருக்கும் மியான்மர் நாட்டில் இருந்து வந்திருந்த 2 பேருக்கும் மன்னார்குடி, முத்துப்பேட்டை, கோவில்வெண்ணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5 பேருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் வசிக்கும் பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு சுகாதாரத்துறை ஊழியர்களால் தீவிர கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் காவல்துறை, சுகாதாரத்துறையின் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களிடையே மிகுந்த அச்சம் ஏற்பட்டு வருகிறது.