முதலமைச்சர் பழனிசாமி கடந்த மாதம் விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இரவு 12 மணி முதல் மறுநாள் பகல் 12 மணிவரை வழங்கப்பட்ட மும்முனை மின்சாரம் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து 24 மணி நேரமும் வழங்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருந்திருந்தனர்.
ஆனால் பல பகுதிகளில் விவசாயகளுக்கான மும்முனை மின்சாரம் இதுவரை கிடைக்கவில்லை என்றும் ஒரு சில பகுதிகளில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். தமிழ்நாடு அரசின் இந்த செயல் அவர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு கிடைத்ததா?
இதுகுறித்து பேசிய விவசாயிகள், "முதலமைச்சரின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கின்றோம். இந்த அறிவிப்பை நம்பி தற்போது கோடை சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். ஆனால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பயிர்களுக்கு தண்ணீர் விட முடியாமல் அவ்வப்போது தவித்து வருகிறோம். இதனால் எந்த பலனுமில்லை. தேர்தல் வாக்குறுத்திக்காக இதை அறிவித்தார்களா என்றும் தெரியவில்லை. மே 2ஆம் தேதிக்கு பிறகு யார் முதலமைச்சராக வந்தாலும் விவசாயிகளின் குறைகள் கலைக்கப்படுமா என்பது சந்தேகமே.
சாதாரணமாகவே மின் பற்றாக்குறை காரணமாக பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் இச்சூழலில் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டால் சிறு குறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழ்நாட்டில் இதை அமல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே மின் உற்பத்தியை கூடுதலாக அதிகரித்து மும்முனை மின்சாரம் தட்டுப்பாடில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் " என கோரிக்கை விடுத்துள்ளனர்.