திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உழவர்கள் கோடை கால பயிராக பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு அண்மையில் வேளாண் இடுபொருள்களின் விலையை உயர்த்தியுள்ளதால் உழவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோடை சாகுபடியான பருத்திக்கான உரங்களுக்குத் தமிழ்நாடு அரசு மானியம் வழங்கிவந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மானியத் தொகை வழங்காமல் நிறுத்திவைத்துள்ளது. இந்த ஆண்டும் பருத்தி சாகுபடிக்கு உரத்திற்கான மானியம் வழங்காததால் உழவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதையடுத்து, "சென்ற வருடம் பருத்தி கிலோ ஒன்றுக்கு 25 முதல் 30 ரூபாய் விலை போனதுபோல் இந்தாண்டும் இதே நிலை நீடித்தால் உழவர்கள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்திக்கும் சூழல் உருவாகும்.
இதனை ஈடுசெய்ய பருத்தி சாகுபடி உரத்திற்கான மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும். வேளாண் இடுபொருள்களின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளதால் குறிப்பிட்ட நேரத்தில் பருத்திக்கு இடுபொருள்கள் வைக்க முடியாமல் தவித்துவருகிறோம்.
இதனால் உழவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு இந்தாண்டிற்கான வேளாண் இடுபொருள்கள் மானியத்தை உழவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.