திருவாரூர்: ஓடம்போகியாற்றிலிருந்து பிரிந்து செல்லும் சுக்கனாற்றை வடிகாலாகவும், பாசனமாகவும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
சுக்கனாறு பாசனத்தை நம்பி 2,000-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. குறிப்பாக மேலப்பேட்டை, கீழபேட்டை, பழ வணக்குடி, கேக்கரை, பள்ளிவாரமங்கலம் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
இந்நிலையில் சுக்கனாற்றை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பொதுப்பணித்துறையினர் தூர்வாராததாலும், திருவாரூர் நகர் பகுதியில் நகராட்சி குப்பைகள் கொட்டப்படுவதாலும், ஆகாயத்தாமரைகள், கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்படுவதாலும் மேட்டூர் தண்ணீர் சிறு துளி கூட செல்ல முடியாமல் அடர்ந்து காணப்படுகிறது.
மேலும் பல்வேறு தனிநபர்களின் ஆக்கிரமிப்புகளால் சுக்கனாறு சுருங்கி வாய்க்காலாக மாறியுள்ளதால் சுக்கனாற்றை நம்பியுள்ள விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் பலமுறை மாவட்ட ஆட்சியர், வட்டாச்சியர், அமைச்சர் முதல் முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகம் வரை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சுக்கனாற்றை முழுமையாக தூர்வாரி கொடுத்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்!