திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது , "அக்னிபத் திட்டத்தை இந்துக்களே அதிகளவில் எதிர்கின்றனர். பாஜக இந்துக்களுக்கு விரோதமான கட்சி என்பது அக்னிபத் திட்ட செயல்படுத்துவதின் மூலமும், அதனால் ஏற்பட்டுள்ள வன்முறைகள் மூலம் தெரிகிறது.
சாதிய வன்கொடுமை மற்றும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கவும் கண்காணிக்கவும் தனி உளவுத்துறை அமைக்க வேண்டும். அதிமுக உட்கட்சி பூசலில் கருத்து தெரிவிக்க விடுதலை சிறுத்தை கட்சிக்கு விருப்பமில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை விளம்பரத்திற்காக எந்தவித ஆதாரமும், முகாந்திரமும் இல்லாமல் தமிழ்நாடு அமைச்சர்கள் மீது குற்றம்சாட்டி வருகிறார்.
காவல் நிலைய வதை கொலைகள் குறித்து விசாரிப்பதற்கும் தனி நீதிபதி கொண்ட ஆணையம் அமைக்க வேண்டும். மோடி தங்கள் கட்சிக்கு சரியான எதிர்க்கட்சி இல்லை என்று கூறுகிறார். காங்கிரஸ் கட்சியை மனதில் வைத்துக் கொண்டு அவர் பேசுகிறார். பாஜகவுக்கு சரியான எதிர்க்கட்சி மக்கள்தான். விரைவில் மக்கள் சரியான பாடத்தை பாஜகவுக்கு புகட்டுவார்கள் என்றார்.