திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இன்று தலையில் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு மருத்துவர்கள் பணியில் இல்லாததால், அங்கிருந்த துப்புரவு பணியாளர் அவருக்கு மருந்து வைத்து கட்டுக் கட்டியுள்ளார். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
மேலும், இந்த மருத்துவமனையில் இது முதல் சம்பவம் கிடையாது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக வந்தவருக்கு துப்புரவு பணியாளர் சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது. அப்போது பணியில் இருந்த மாவட்ட மருத்துவ இணை இயக்குநாிடம் புகார் அளிக்கபட்டதைத் தொடர்ந்து, அவர் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
ஆனால், மீண்டும் இது மாதிாியான செயல் தொடர்ந்து நடைபெறுவது வழக்கமாகியுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 1300 மருத்துவர்களை புதியதாக நியமித்து, திருவாரூர் மாவட்டம் முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக இருக்கும் என அறிவிப்பை வெளியிட்டதோடு சாி, அதன்பிறகு ஒரு மருத்துவரைக் கூட முறையாக நியமிக்கவில்லை.
பணியில் இருக்கும் மருத்துவர்களோ தாங்கள் வாங்கும் அரசு ஊதியம் பற்றாக்குறையால் 80 விழுக்காடு நேரம் தங்களது சொந்த மருத்துவமனைக்கு பணியாற்ற சென்றுவிடுகின்றனர் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபோன்று சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால் நோயாளிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையென்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.