திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் கிருஷ்ணா ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். திருவாரூர், கமலாபுரம், கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் வாங்கித் தருவதாக இவர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் பணம் வசூல் செய்துள்ளார்.
இந்நிலையில், கிருஷ்ணா ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் நீதி மோகன் தன்னிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகக் கூறி அலுவலகத்தின் எதிரில் உள்ள செல்ஃபோன் டவரில் ஏறிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
மேலும், நீதிமோகனை கைது செய்து அவரிடமிருந்து பணத்தை பெற்றுத்தந்தால் மட்டுமே செல்ஃபோன் டவரில் இருந்து இறங்குவேன் என கூறி காலை 10 மணி முதல் பாண்டியன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், சுமார் மூன்று மணி நேர பேச்சுவார்த்தைக்குக் பின்னர் தீயணைப்புத் துறையினரின் உதவியோடு பாண்டியனைக் கீழே வரவைத்தனர். இந்த சம்பம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.