திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூபாய் 6.5 கோடி திட்ட மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்ச்சித் துறை அலுவலக கட்டடத்தின் கட்டுமான பணிகளை தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், '' இந்த ஆண்டிற்கான காரிப் பருவத்தில் இதுவரை 31 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளோம். தற்போது முற்பட்ட குருவைக்கான நெல் கொள்முதல் நடைபெறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் 551 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது.
நீட் தேர்வை பொறுத்தவரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முடிவே தற்போதைய அரசின் முடிவாகும். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது.
தற்போது நீட் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தற்கொலை போன்ற முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே எங்களுடைய அன்பான வேண்டுகோள்'' என்றார்.
இதையும் படிங்க: நீட் அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் தகனம்!