திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையின் கீழ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் தேர்தல் பரப்புரையின்போது பெறப்பட்ட மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனை அம்மாவட்ட ஆட்சியர் சாந்தா, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் சாந்தா, ”தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின் போது பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாள்களில் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டு கையெழுத்திட்ட முதல் ஐந்து கோப்புகளில் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற புதிய துறையினை உருவாக்கினார்.
அதற்கென சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு பத்து நாள்களில் குறைதீர்ப்புப் பணிகள் தொடங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில், உடனடியாக தீர்வு காணப்பட வேண்டிய மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், சாலை மேம்பாடு, குடிநீர் வசதி, அடிப்படை வசதி எனப் பொதுவான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சூரப்பா மீதான அறிக்கை: அரசிடம் அடுத்தவாரம் சமர்ப்பிக்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன்