தமிழ்நாட்டில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழி பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட 14 வகையான நெகிழிப் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மீது அரசு அபராதம் விதித்தும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்துவருகிறது.
இதற்கிடையே பிபி எனும் பாலிபுரோப்பலின் நெகிழி கவர் கொண்டுதான் உள்நாட்டு, வெளிநாட்டு கம்பெனிகளில் பொருட்கள் பேக்கிங் செய்யப்படுகிறது. திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சிறுகுறு தொழில்களான மசாலா, முறுக்கு, சிப்ஸ் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், மளிகைக் கடைகள் போன்றவற்றில் சோதனைகள் மேற்கொண்டு பிபி கவர்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தும் வருகிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி சிறு, குறு வணிகர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
மேலும் இது குறித்து குறு வணிகர்கள் கூறுகையில், இந்த பிபி நெகிழி கவர்களை நாங்கள் மத்திய மாநில அரசுகளிடம் வரி செலுத்தி வாங்குகிறோம். ஆனால் தற்போது மாவட்ட நிர்வாகம் அந்த கவர்களை பறிமுதல் செய்வதால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இந்த நடவடிக்கையை நிறுத்தாவிட்டால் தங்களின் கடைகளை பூட்டி சாவியை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நெகிழிக்கு மாற்றாகக் களமிறங்கிய அரசுப் பள்ளி மாணவிகள்!