புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து திருவாரூர் மாவட்டத்திற்குச் சாராய கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை பேரளம் காவல் சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இன்று (செப்டம்பர் 19) காவல் உதவி ஆய்வாளர் கபிலன் தலைமையிலான காவலர்கள் காரைக்கால் பகுதியிலிருந்து கொல்லுமாங்குடி நோக்கி வந்த காரை மறித்து சோதனை செய்தனர்.
காரில் காரைக்காலிலிருந்து கடத்திவரப்பட்ட 2,730 லிட்டர் சாராய பாக்கெட்டுகளைக் கண்டுபிடித்து பறிமுதல்செய்தனர். பின்னர் குத்தாலம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார், வில்லியனூரைச் சேர்ந்த மணிமாறன், குடவாசலைச் சேர்ந்த சரவணன் ஆகிய மூவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி திருத்துறைப்பூண்டி சிறையில் அடைத்தனர்.
மேலும் சாராய கடத்தலுக்குப் பயன்படுத்திய ஸ்கார்பியோ கார், பைக் ஆகிய வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.