திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தென்கரைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம்(40). இவர் நேற்று பறவைகள் பிடிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அப்போது, கயிற்றினால் கட்டிவைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி கீழே விழுந்து வெடித்தது. இதில் பின்னால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தென்கரைவாசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தமிழ்செல்வம் என்பவரது மகன்கள் பாலமுரளி (13), செல்வபாலாஜி (12) ஆகியோரை துப்பாக்கி ரவைகள் தாக்கியதில் காயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதனைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த இருவரும் பள்ளி மாணவர்கள் ஆவார்கள். இதனிடையே சுந்தரத்தை கைதுசெய்த மன்னார்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கிக்கு உரிமம் இல்லை என்று தெரியவந்துள்ளது. நாட்டுத் துப்பாக்கி வெடித்து சிறுவர்கள் காயமடைந்த சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.