நாட்டின் தலைநகரங்களில் விற்பனை செய்யப்படும் மானியமில்லாத 14 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த 12ஆம் தேதி முதல் ரூ.147 உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அந்த வகையில் 14.2 கிலோ மானியமில்லாத சிலிண்டரின் விலை டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன் படி சென்னையில் எரிவாயு சிலிண்டர் ரூ. 734-லிருந்து ரூ. 147 உயர்த்தப்பட்டு தற்போதைய விலை ரூ. 881-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மாதர் சம்மேளனம் சார்பில், மன்னார்குடி பெரியார் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை திரும்பெற வலியுறுத்தி, சமையல் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், கும்மியடித்தும் நூதன முறையில் பெண்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மேலும் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மக்களை பாதிப்பதாகவே உள்ளது எனக் கூறி, மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் மாதர்சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: போராட்டக் களமான வண்ணாரப்பேட்டை - சிஏஏவை எதிர்த்து இங்கும் ஒரு ஷாகீன் பாக்!