திருவாரூர் மாவட்டத்திற்கு கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுமேற்கொள்ள தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வருகைபுரிந்தார். அப்போது அமைச்சரை தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "இந்தியா முழுவதும் கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், 3ஆம் அலையும் பரவும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையைச் சிறப்பாகச் செயல்படுத்தும் தமிழ்நாட்டின் புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
கரோனாவால் உயிரிழக்கும் குடும்பங்களுக்கு இறப்புச்சான்று வழங்க ஒன்றிய அரசு மறுப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதனால் தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தாய்-தந்தையை இழந்த குழந்தைகளுக்கு வழங்கப்படுகிற நிவாரணத் திட்டங்கள்கூட பயன் பெற விண்ணப்பிக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
எனவே கரோனாவால் அனுமதிக்கப்பட்டு இறக்கும்போது இறப்புச்சான்றிதழில் கரோனா இறப்பு என்று கட்டாயம் பதிவிட வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் எடுத்துக் கூறினேன். அனைத்திலும் இந்தியாவிலேயே முன்மாதிரியாகச் செயல்படுகிற தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசை வலியுறுத்தி இறப்புச் சான்று வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
அதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் விரைவில் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி சான்று வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்" என்றார்.
இதையும் படிங்க: திருவாரூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு!