தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘தமிழ்நாடு முழுவதும் தென்மேற்குப் பருவ மழை உரிய காலத்தில் உரிய அளவு பெய்துள்ளதால் சாகுபடி பணிகள் பெரும்பாலான மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. காவிரி டெல்டாவில் ஒரு போக சம்பா சாகுபடிக்கு நேரடி விதைப்பு மற்றும் நாற்று விடும் பணிகள் தொடங்கியுள்ளது.
கஜா புயலில் பாதிப்படைந்த விவசாயிகள் பொருளாதார நெருக்கடியால் சாகுபடி பணிகளை தொடங்குவதற்கு அச்சம் அடைந்துள்ளனர். கடன் தள்ளுபடி செய்ய மறுப்பதால் இந்த ஆண்டு கூட்டுறவுக் கடன் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக கடன் முழுவதும் தள்ளுபடி செய்து நிபந்தனையின்றி புதிய கடன் வழங்கிட வேண்டும்.
இந்நிலையில், வரும் அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து தேசியமயமாக்கப்பட்ட மற்றும் வணிக வங்கிகளில் வழங்கி வந்த 4% வட்டியிலான நகைக்கடன் வழங்குவதை மத்திய அரசு ரத்து செய்ய உள்ளதாகவும்; இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும், கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா நகைக்கடன் வழங்கப்படுவதையும் நிறுத்தப்பட உள்ளதாகவும் வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளை மத்திய மாநில அரசுகள் இணைந்து துரோகம் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதனை உடனடியாக கைவிட வேண்டும். நிபந்தனையின்றி எப்பொழுதும் போல் நகைக்கடன் வழங்கிட வலியுறுத்துகிறேன்’ என்று தெரிவித்தார்.