கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவுதலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் பிறப்பித்துள்ள நிலையில், தனி நபர் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்காக காவல் துறையினரும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், திருவாரூர் வண்டிக்காரத்தெரு மற்றும் ஐ.பி. கோயில் தெருவைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அறிந்த, காவல் துறையினர், அப்பகுதி முழுவதையும் தடுப்புகளை ஏற்படுத்தி அடைத்து வைத்துள்ளனர்.
எனவே, திருவாரூர் மாவட்டம் முழுவதும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
திருவாரூர் முழுவதையும் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் காவல் துறை ஊரடங்கு உத்தரவு இன்று கடுமையாகப் பின்பற்றப்பட்ட நிலையில், திருவாரூர் வாள வாய்க்கால் பகுதியிலிருந்து ட்ரோன் கேமரா மூலம் நகரம் முழுவதும் கண்காணிக்கப்பட்டது. மேலும், ட்ரோன் கேமராவின் கழுகுப் பார்வையில், வண்டிக்காரத்தெரு பகுதியில் ஓடம் போக்கியாற்றில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதும், ட்ரோன் கேமராவை கண்டவுடன் தலைதெறிக்க ஓட்டம் பிடிப்பதுமான காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளன. அதுபோல் மாடியில் அமர்ந்து கொண்டு பட்டம் விடும் சிறுவர்களையும் ட்ரோன் கேமரா படம் பிடித்துள்ளது. மேலும், ஊரடங்கு உத்தரவு காரணமாக வெறிச்சோடி காணப்படும் திருவாரூரை ட்ரோன் கேமராவில் காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.இதையும் படிங்க: ஊடகவியலாளர் இருவருக்கு கரோனா தொற்று!