திருவாரூர் அருகே உள்ள இளவங்கர்குடி கிராமத்தில் வசிக்கும் நித்தியா (30) என்பவரின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் வந்துசென்றதை உறவினர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் நித்தியா வீட்டிற்கு வந்த நபரை, கிராம மக்கள் அப்பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் சுகுமார் ஆகியோர் சேர்ந்து விசாரித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்நபர் வழக்கறிஞர் சுகுமாரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுகுமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து கிராம மக்கள் திருவாரூர் தாலுகா காவல் துறையினருக்குப் புகார் அளித்து, நித்யாவைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து நித்யாவை கைதுசெய்த காவல் துறையினர், மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லும் வழியில் தப்பியோடிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நித்தியாவையும், வழக்கறிஞரை கத்தியால் குத்திய நபரையும் உடனே கைதுசெய்ய வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் தகவலறிந்து வந்த திருவாரூர் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் தினேஷ்குமார் விசாரணை செய்து குற்றவாளிகளைக் கைதுசெய்வதாகக் கூறியதை அடுத்து, கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று பதற்றமான சூழல் உருவானது.
இதையும் படிங்க: சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் 72 வயது மூதாட்டி கழுத்து அறுபட்ட நிலையில் மரணம்