நாடு முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
சமீபத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கும் பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்களுக்கும் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியில் நடமாடுபவர்களிடம் இருந்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும், அதேபோல் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிபவர்களிடம் இருந்து 200 ரூபாயும் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களிடமிருந்து 500 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும்.
சலூன், உடற்பயிற்சி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவைகள் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருந்தால் ரூபாய் 5000 ரூபாய் அபதாரம் விதிக்கப்படும்.
இதைக் கண்காணிக்க அரசு அலுவலர்கள் பணி அமரத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் முகக் கவசம் அணியாமல் வெளியில் வரக்கூடாது, அதே போல் பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது. மீறினால் அபதாரம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை மாநகரப் பேருந்துகளில் 1.23 கோடி பேர் பயணம்!