திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா சிறப்பு நிதி தொகுப்பின் கீழ் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, புலம்பெயர்ந்து மீண்டும் திரும்பிய திறன் பெற்ற இளைஞர்களுக்கு கடனுதவி வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் உதவித் தொகைக்கான காசோலையை பயனாளிகளுக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படவுள்ளது. அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு எப்போதும் விவசாயிகளை பாதுகாக்கின்ற அரசாகவே உள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மூன்று மசோதாக்களில் விவசாயிகளுக்கு தீமை பயக்கும் அம்சம் எதுவும் இல்லை.
இதில் பிரச்னை ஏதும் திகழுமானால் அதில் தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்க்கும் பொருட்டு மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. எப்போதும் இருமொழிக் கொள்கை என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ’ஆட்டம் முடியும் ஆறு மாதத்தில் விடியல் பிறக்கும்’ என ஸ்டாலின் கூறியதற்கு குறித்து கேள்விக்கு, அமைச்சர் கூறியதாவது, “ ஸ்டாலின் தினமும் ஏதாவது ஒரு கருத்து தெரிவித்து வருகிறார். அது அவரது உரிமை, அவரது கருத்துகள் அனைத்தும் பகல் கனவாகத்தான் முடியும்.
அதிமுக ஆட்சி மக்கள் விரும்புகின்ற ஆட்சியாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2021ஆம் ஆண்டில் மீண்டும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், துணை ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ’ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ராமன்-லட்சுமணன் போன்றவர்கள்' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்