திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுகக்குடி கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்கள் இறந்தவர்களின் சடலங்களை பல ஆண்டுகளுக்கும் மேலாக வயல் வரப்புகளில் புதைத்து வந்தனர். இவர்களின் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கிராமத்திற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மயான கொட்டகை அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இருப்பினும் மயான கொட்டகைக்கு செல்வதற்கான சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் சடலங்களை விளை நிலங்கள் வழியாக சுமந்து செல்லும் அவல நிலை, கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இன்று (டிச.24) அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்ற நபர் உயிரிழந்த நிலையில், அவரின் சடலத்தை சாகுபடி செய்த வயல்களின் நடுவே உறவினர்கள் தடுமாறி சுமந்து சென்றனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், இப்பிரச்னை குறித்து பலமுறை நாங்கள் வட்டாட்சியர் முதல் அமைச்சர்கள் வரை முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகம் வரை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு அலுவலர்கள் முயற்சி எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதால் இந்த அவல நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. விரையில் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கால்வாய் செல்லும் வழித்தடத்தில் சடலங்களை எடுத்துச் செல்லும் பட்டியலின மக்கள்!