திருவாரூர்: வடிகால் வாய்க்காலை போர்kகால அடிப்படையில் உடனே தூர்வாரித் தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள காளியாகுடி, வாலூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் சம்பா, தாளடி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சூழலில், அந்த பகுதியின் பாசன வாய்க்காலான இடியாற்று வாய்க்கால், ஐந்து வருடங்களுக்கும் மேலாக தூர்வாரப்படாததால் கோரைகள் மண்டியும், கருவேலமர காடுகள் சூழ்ந்தும் காணப்படுவதால், தண்ணீர் வடிவதற்கு வாய்ப்பில்லாமல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்துவரும் சூழலில், வடிகால் வாய்க்கால் முழுமையாக தூர்வாரப்பட்டால் மட்டுமே இந்த பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 2000-ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்காமல் காப்பாற்றப்படும் என்று கூறப்படுகிறது.
இதனால் உடனடியாக மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித் துறை அலுவலர்களும் கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இடியாற்று வடிகால் வாய்க்காலை முழுமையாக தூர்வாரி கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.