குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதையடுத்து மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பதற்குள் ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்களை தூர்வாரி முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில்,திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கொல்லுமாங்குடியிலிருந்து காரைக்கால் நோக்கி செல்லும் நாட்டாறு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாததால் அதன் பாசனத்தை நம்பி வாழும் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய விவசாயிகள்,”கடந்த ஆண்டு குடிமராமத்து பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. ஆனால் கொல்லுமாங்குடியில் ஓடக்கூடிய நாட்டாறு தூர்வாரப்படவில்லை. இதனை நம்பி சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற முடியாமல் தவித்து வருகிறோம்.
குறிப்பாக கொல்லுமாங்குடி, பாவட்டக்குடி, மாத்தூர், திருக்கொட்டாரம், பழையாறு, மாத்தூர்,கமுகக்குடி, உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிறு குறு விவசாயிகள் அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றோம். நாட்டாறு தூர்வாரப்படாததால் புதர்கள் மண்டி சிறிய வாய்க்கால் போல் மாறி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.