திருவாரூர்: மழை காரணமாக பயிர்களை இழந்து நட்டத்தில் உள்ள நன்னிலம் விவசாயிகள், பொங்கலை கருப்பு தினம் என்று கூறி புறக்கணித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாக பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக நெற்பயிற்கள் முழுவதும் நீரில் மூழ்கி அழுகத்தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனையில் தவித்து வரும் நிலையில், இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பொங்கல் திருநாளை நன்னிலம் பகுதி விவசாயிகள் கருப்பு நாளாக கருதி புறக்கணித்துள்ளனர்.
இது குறித்து பேசிய நன்னிலம் பகுதி விவசாயிகள், தமிழகம் முழுவதும் விவசாயிகளின் தினமாக கொண்டாடும் தைப்பொங்கல் திருநாள் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஒருபுறம் வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம் டெல்டா மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு மேலாக பெய்து வரும் கனமழையால் விவசாய நிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கி அழுகத்தொடங்கியுள்ளன.
இப்படி தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், எப்படி தைப்பொங்கலை சிறப்பாக நாங்கள் கொண்டாட முடியும். இந்த நாள் எங்களுக்கு கருப்பு தினமாக இருக்கிறது.
எனவே நன்னிலம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு பாதிப்பின் அடிப்படையில் மறு கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.